Thursday, 11 March 2010

கன்னம் – channel

வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இன்று நிறைய ஒலி, ஒளி அலைவரிசைகள் உள்ளன. ஆங்கிலத்தில் இந்த அலை வரிசைகளை ‘channels’ என்பர்.

ஏரிகளில் நிரம்பியிருக்கும் தண்ணீர், கால்வாய்கள் மூலம் பல்வேறிடங்களுக்குச் செல்கின்றது. அதைப் போலத்தான் வானொலி, தொலைகாட்சி நிலையங்கள் ஓரிடத்திலிருந்து பரப்பப்படும் ஒலி, ஒளி அலைகள் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ள இடங்களுக்குச் சென்று சேர்கின்றன.

இந்த உண்மையின் அடிப்படையில்தான் தண்ணீர் ஓடும் கால்வாயைக் குறிக்கும் ‘canal’ என்னும் சொல்லிலிருந்து channel என்னும் சொல்லை ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார்கள்.

தோண்டுதலாகிய ‘கல்’ என்பதே கல் - கன் - கன்னு - கன்னம் எனத் துளையைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லையும் தந்தது. கன்னம் என்பதற்குத் தமிழில் படகு, தாயத்து, துலாக்கோல், தட்டு எனப் பல பொருள்கள் உண்டு. இந்தப் பொருள்கள் யாவும் துளையுடையனவாய் இருப்பதாலேயே கன்னம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டன.

‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?’ என்பது பழமொழி. இங்குக் கன்னம் சுவரைத் துளையிடுதலைக் குறிக்கிறது.

இலத்தீன் மொழியில் ‘canna’ என்றொரு சொல் உண்டு. அதற்குத் துளை என்பதே மூலப்பொருள். உள்துளையுடைய பிரம்பினையும் இக் canna சொல் இலத்தீனில் குறிக்கிறது. ‘cane’ எனப் பிரம்பினைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லிற்கும் can எனத் தண்ணீர், எண்ணெய் போற்றவற்றை வைக்கும் குடுவையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லிற்கும் இலத்தீனின் canna தான் வேராகக் காட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் ஒடும் canal சொல்லின் வேறும் canna என்ற இலத்தீன் சொல்வழி உருவானதாகவே அகராதிகள் விளக்குகின்றன.

கல்லுதலாகிய தோண்டுதல் வினையிலிருந்து உருவான கல் - கன் - கன்னம் என்னும் சொல்லை இலத்தீனின் canna என்பதோடு நாம் எண்ணிப் பார்க்கிறோம். ஆனால் ஆங்கில வேர்ச்சொல் ஆய்வறிஞர்கள் கால்வாயைக் குறிக்கும் canal என்னும் சொல்லிற்கும் ஒலி, ஒளி அலைவரிசையைக் குறிக்கும் channels என்னும் சொல்லிற்கும் நம்மை மேலும் அழைத்துச் செல்கிறார்கள்.

No comments: