Friday, 16 April 2010

சுன்னம் – சுழியம்

மொழி இனத்தின் உயிரென மொழிகிறது மலாய் பழமொழி. அம் மொழி பல்லாயிரம் அல்லது சில இலக்கம் சொற்களால் ஆனாது. அச் சொற்களோ ஆழ்ந்த கருத்துகளை ஒலி வடிவமையாய் கொண்டுள்ளன. சொற்கள் அழியுமாயின் மொழி அழியும், மொழி அழியுமாயின் இனம் அழியும் என்பது திண்ணம்.

ஆக, ஓவ்வொரு இனத்தின் அடையாளமும் சொல்லில்தான் புதையுண்டுள்ளது. இவ் வுண்மை உணர்ந்தோர்க்கே ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவர். உண்மையறியாதவரே, ‘வெறும் சொல்தானே இதற்கு ஏன் எவ்வளவு வம்பு, சட்டையெல்லாம்’ என்பர். இப்படி ஒவ்வொவரும் எண்ணி ஆளுக்கொரு தமிழ்ச்சொற்களைப் புறந்தள்ளினால் ஆவது என்னவென்பதைச் சொல்லவும் வேண்டா. விளங்கியவர்களுக்கும் விளங்காதவர்களுக்கும்தான் தற்காலத்தில் ‘சுழியம்’ ‘பூச்சியம்’ ஆகிய இவ்விரு சொல்லில் எதை ஏற்பது என்ற வாதம் நடக்கிறது. விளங்காதவர்களுக்கு விளக்கும் பொருட்டு சுழியம் சொல்லைச் சற்று பிளந்தாராய்வோம்.

சுழியம் என்னும் சொல்லைச் சுழிப்பதால் அஃதாவது வளைவு கருத்தில் இச் சொல்லை சுழியம் என்பர். இது சுழியத்தின் (0) வடிவத்தைக் குறிப்பதே. இது சரியே.

சுழியம் என்னும் சொல்லை இன்மைக் கருத்தில் கொள்ளுதலலே சாலப்பொருந்தும். சுல் எனும் வேர்ச்சொல்லே சுழியத்திற்கு மூலமாய் உள்ளது. சுல் வேர்ச்சொல் முதலில் சிறுமை கருத்தில் ஆளப்படுகிறது. கீழ்காண்பனவற்றை ஒப்புநோக்குக.

சுல் > சில்
சில் = அற்பம், நுண்மையான, சிறிதளவு, கொஞ்சம்.
சில = கொஞ்சம், சிறிது
சில் > சின்
சின்னம் = சிறியது
சின்னம்மா= சிறியதாய், சிற்றனன்னை
சுல் > சுன் = வெறுமை, சுழியம் (இன்மைக் கருத்து)
சுன் + அம் > சுன்னம் = பாழ், சுழியம்(0) எனும் எண் (இன்மைக் கருத்து)

மேற்காட்டியது மிகச்சில காட்டுகளே. இங்கே கவனிக்கத்தக்கது ‘சிறுமை’ கருத்தில் ‘வெறுமை’ கருத்து பிறக்கும் விதமே. ஒரு பொருள் சிறியதாகி பின் நுண்மையாகி பின் இல்லாமல் போதல் இயல்பே. கீழ்க்காணும் இன்னுஞ் சில காட்டுகளில் எவ்வாறு பிற சிறுமை கருத்தை உணர்த்தும் வேர்ச்சொற்களும் இவ்வாறே கருத்து திரிபு கொள்ளுதலைக் கவனியுங்கள்.

முல் > வல்
வற்றுதல் = குறைதல், சுருங்குதல் (சிறுமை கருத்து)
வற்று > வெற்று = வீண், காலியான, வெறுமை (இன்மைக் கருத்து)

வெற்று வேலை என்பது பேச்சு வழங்கில் ‘வெட்டி வேலை’ என்றுரைப்பது பயனற்ற (இன்மைக் கருத்து) வேலையை உணர்த்துகிறது.

புள்>பொள்+து > பொட்டு > பொடு
பொடு > சிறியது, அற்பம் (சிறுமைக் கருத்து)
பொடுகு > தலையில் பற்றும் சிறுதுணுக்கு வடிவான பொருள் (சிறுமைக் கருத்து)
பொடியன் > சிறியவன், சின்னவன் (சிறுமைக் கருத்து)
பொட்டு > பொட்டல் = வெட்டவெளி, வெற்றிடம், வெறுந்தரை (இன்மைக் கருத்து)

இன்னும் சில காட்டுகள்

இல்
இல் > இலை = இல்லியது இலை மெல்லிதாக இருக்கும் மரஞ்செடிகொடிகளின் இலை எனும் உறுப்பு.
இல்லை, இன்மை= இல்லாமை (இன்மைக் கருத்து)

மேற்சுட்டிய காட்டுகளின் வழி அறியவேண்டுவது ஒன்றே, அஃதாவது சிறுமை கருத்தில் இன்மை கருத்து பிறக்கிறது என்பதாகும். இப்பொழுது ‘சுழியத்திற்கு’ வருவோம்.

சுல்>சுது>சூது
சூது = மறைத்துக்கூறும் வஞ்சகம் (சிறுமைக் கருத்து)
சுழித்தல் = முகத்தைச் சுருக்குதல் (சிறுமைக் கருத்து)
சுழி + அம் = சுழியம் (இன்மைக் கருத்து)

ஆக, சுழியம் எனுஞ் சொல் ‘சுல்’ எனும் சிறுமைக் கருத்தையுணர்தும் வேர்ச்சொல்லில் தொடங்கிப் பின்னர் இன்மைக் கருத்தை உணர்துகிறது. மலாய்மொழியில் ‘கோசோங்’ என்பதும் இன்மை கருத்தை உணர்த்துவதை நோக்குக. அதோடு தமிழின் சுல் > சுன் > சூன் என்றாகி மலாய்மொழியில் ‘சூன்ஞி - sunyi’, எந்தவொரு ஒலியின்மையை உணர்துவதையும் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

இவ்வளவு தெளிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்ச் சுழியம் இருக்க ‘பூச்சியம்’ ‘பூஜ்ஜியம்’ ‘பூஜ்யம்’ எதற்கு? பூச்சியத்திற்கு எந்தவொரு கல்வியதிகாரியாலும் கருத்துவிளக்கம் சொல்ல இயலுமா? அப்படிச் சொன்னாலும் அது தமிழாகுமா? அப்படியிருந்தும் சிலர் பூச்சியம்தான் வேண்டும் என்பவர்கள் சொல்லும் காரணங்கள் சில. அவற்றுள்

1.  சுழியம் என்றால் விளங்காது.
2.  பூச்சியத்தைத்தான் காலங்காலமாக எழுத்தியும் சொல்லியும் வருகிறோம். (எந்தக்காலமென்று மறு வினா தொடுத்தால் திருதிருவென விழிப்பர்)
3. இன்னும் சிலர் ‘பூச்சியத்திற்குள்ளே ஒரு இராஜ்சியதை ஆண்டுக்கொண்டு இருப்பான்’ போன்ற நல்ல பாடலை மாணவர்கள் படிக்க நேரிட்டால் அவர்களால் இது போன்ற நல்ல பாடல்களைப் புரிந்துகொள்ளவியலாது போகுமெனக் கவலையடகின்றனர்.

மேற் கூறிய காரணங்கள் யாவும் நகைப்புக்குரியன. சற்றும் ஏரணமும் இல்லை. சுழியம் என்றால் விளங்காது என்பதில் எள்ளளவும் அடிப்படையில்லை. மாணவர்கள் கற்கும் ஆற்றலும் புரிந்துகொள்ளும் ஆற்றலும் உடையவர்கள். ஆகவே அவர்களுக்கு விளங்காது என்று கூறுபவர்களே விளங்காத ஆசிரியர்களாகவும் கல்வி அதிகாரிகளாகவும் இருப்பர். ‘காலங்காலமாக’ தமிழிலே கணித வாய்ப்பாட்டைப் படித்துக்கொண்டு வந்த மாணவர்கள், கல்வி கொள்கையில் மாற்றம் செய்ததும் திடீரென ஆங்கிலத்தில் வாய்ப்பாட்டைப் பாடிய நம் தமிழ் மாணவர்களை எந்தவொரு ஆசிரியரும் கண்டதில்லையோ? அப்படியிருக்க, தமிழ் மாணவர்களுக்குத் தமிழில் ‘சுழியம்’ என்றால் விளங்காமல் போய்விடுமோ?

காலத்தால் தமிழின்கண் சூழ்சியால் கலந்த பல்லாயிர பிறமொழிச்சொற்களைக் காலந்தோறும் களையெடுக்கும் பணியைச் செய்வது நற்றாமிழாசிரியர்களின் கடமையில் ஒன்றன்றே.

சுழியத்தை நாம் புறக்கணித்தால் தமிழர்க்களுக்குப் ‘பூச்சியத்தை’ விட்டால், தமிழில் சுழியத்தைக் குறிக்க சொல்லே இல்லை என்றாகிவிடும். பூச்சியம் தமிழ்சொல் அல்லவென்பதை மாணவர்கள் உணரும்போது தமிழில் பூச்சியத்திற்குச் சொல் இல்லை என்றுதானே நினைப்பர். உலகத்தமிழ்த்தாய் மொழியில் ‘பூச்சியத்திற்குத்’ தமிழில் சொல்லே இல்லை என்பதை மாணவர்களுக்குப் பதியச்செய்வது எவ்வளவு பெரிய மடமையாகும்? இந்தக் கவலையைவிட பூச்சியம் என்று சொல்லில் இருக்கும் பாடல் எல்லாம் படிக்கவியலாமல் போகும் என்பதா நம் கவலை? அல்லது இக் கூற்றில்தான் உண்மை உளவோ?

ஒவ்வொரு தமிழ்ச் சொல்லிலும் அறிவியல் உண்டு, இனமரபுண்டு, வரலாற்று உண்மையுண்டு, பண்பாடுண்டு, வாழ்வியலுண்டு, தமிழ்ச்சமயமுண்டு. இப்படியிருக்க ‘வெறும் சொல்தானே, இதற்கு ஏன் சண்டை?’ என்று வினவுபவர்களே ‘சுழியர்கள்’;‘ஞானசூன்யன்கள்’.

கருவி நூல்
1. சொல் அறிவியல் 2 - இர.திருச்செல்வம்

No comments: