Tuesday, 6 July 2010

யு.பி.எசு.ஆர் & பி.எம்.ஆர் அகற்றப்பட்டால்........

யு.பி.எசு.ஆர் & பி.எம்.ஆர் தேர்வை அகற்றப்படுவதையொட்டி தற்போது கல்வி அமைச்சு ஆய்வுகளையும் மக்கள் கருத்துகளையும் கேட்டு வருகிறது.  இதை நடைமுறைப்படுத்தப்பட்டால் விளைகின்ற நன்மை தீமை ஆசிரியர்களையும் மாணவர்களையுமே முழுமையாகப் போய் சேரும். கல்வித் துறையில் நேராகத் தொடர்புடைய, இன்னும் சொல்லப்போனால் களத்தில் இறங்கி மாணவ பயிர்களைப் கபடில்லாமால் வளர்த்தெடுக்கும் ஆசிரிய பெருமக்களின் கருத்திற்கே அரசு முதலிடம் அளிக்க வேண்டும்; செவியுஞ் சாய்க்க வேண்டுமென்பது என் அவா.

ஆசிரியர்களிடத்திலும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இரு வேறு உலகத்து இயற்கை என்பது மெய்யே! இருப்பினும் இரு வேறு கருத்தையும் நன்றாய்ந்து எவருக்கும் கேடில்லாமல் முடிவு எடுப்பதே அறிவும் ஆகும். இனி யு.பி.எசு.ஆர், பி.எம்.ஆர் ஆகிய தேர்வுகளை அகற்றப்படுமாயின் ஏற்படும் விளைவுகளைப் பொதுவாக நோக்குவோம்.

நன்மை.
  1. சிறப்பு வகுப்பு, கூடுதல் வகுப்பு, இரவு வகுப்பு, மாலை வகுப்பு என பல உருவத்தில் வந்து ஆசிரியர்களை அச்சுறுத்தும் இவ் வகைவகுப்புகள் நடைபெறா.
  2. மாணவர்கள் வெறும் மனனம் செய்து ஒப்புவிக்கும் பழக்கத்தை விடுத்துச் சற்று ஆய்வுச் சிந்தனைக்குக் கற்றல் கற்பித்தல் இடமளிக்கும்.
  3. கல்விக்கு ஏற்ற மாணவனாக இல்லாமல் மாணவனுக்கு ஏற்ற கல்வியை ஆசிரியர் அளிக்கலாம்.
  4. இணைப்பாடத்தில் நிறைவான கவனம் செலுத்தலாம்.
  5. கல்வியறிவில் சிறக்காத மாணவர்களின் பிற உள்ளாற்றலை அல்லது 
  6. தனித்திறனை வெளிக்கொணர ஆசிரியரால் இயலும்.
  7. தேர்வுக்காக வேண்டி செய்யப்படும் பல இலக்க பணம் அரசுக்கு மீதப்படும்.
  8. மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவதால், பள்ளிக்கு மட்டம் போடுவது, வீண் விடுமுறை எடுப்பது குறையலாம்.
  9. யு.பி.எசு.ஆர், பி.எம்.ஆர் ஆகிய தேர்வு முடிவால் நடந்த தாற்கொலைகள் இனி நடக்கா.
  10. யு.பி.எசு.ஆர், பி.எம்.ஆர் ஆகிய பெயர்களில் நடக்கும் பூசைகளும் வீண்சடங்குகளும் இனி நடைப்பெறா.



தீமை.
  1. ஆசியர்கள் மெத்தன போக்குக் கொள்ளலாம்.
  2. கற்றல் கற்பித்தல் சற்று மந்தமடையலாம்.
  3. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தாமல் போகலாம்.
  4. தேர்வு அச்சம் இல்லாமையால் மாணவர்கள் பள்ளிக்குத் தங்களின் விருப்பப்படி மட்டம் அல்லது விடுமுறை எடுக்கலாம்.
  5. 10 ஆண்டுகளாக எந்தவொரு பொது தேர்விலும் அமராத நிலையில் 11ஆறாம் ஆண்டில்(படிவம் 5) மட்டும் தேர்வை எதிர்நோக்கும் பொழுது மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படும்.
  6. பி.எம்.ஆர் அகற்றப்பட்டால் கலை புல, அறிவியல் புல மாணவர்களைப் பிரிப்பதில் மாற்று வழிமுறை காண வேண்டும்.
  7. கல்வியில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும், தரப்படுத்தவும் முடியாது போகலாம்.
  8. கல்வியில் சிறக்க மாணவர்களிடையே முயற்சியின்மை ஏற்படலாம்.
  9. பள்ளி அளவிலான மாற்று மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டால் ஆசிரியர்களின் வேலை பளு கூடும்.


கல்வி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை முற்றிலுமாகத் தவிர்த்தலும் நீக்குதலும் சாத்தியமால்லாதவொன்று என அரசு உணர்ந்தமையால், இதற்கு மாற்றாக பள்ளி அளவிலான மதிப்பீட்டு முறையை அரசு அறிமுகஞ் செய்யும். இவ் வகை மதிப்பீட்டிலும் குறைகள் இல்லை என மறுக்க முடியாது. ஒரு முடிச்சை அவில்க போய் மேலும் பத்து முடிச்சு போட்டது போல அரசின் செயல் அமைந்துவிடக் கூடாது என்பதே என் முடிவு.

No comments: