Wednesday, 28 July 2010

இணையம் ஆசிரியர்களின் தோழன்

அன்பிற்கினிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு என் அன்பு வணக்கம்.

இணையம் வழி அல்லது இணைய ஊடாக எவ்வாறு ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் பயன் பெறலாம், பயனாக்கிக் கொள்ளலாம் என்பதை உங்களோடு பகிர விழைகிறேன்.


எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு

என்பார் வள்ளுவர்.  இற்றை நாளின் புதியக் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும், துறைசார்ந்த கருத்துகளும் புத்தாக்கங்களும் அளக்கவியலா வளர்ச்சியினைக் கண்டுவருகின்றன. இம் மாற்றங்கள் எத்துறையையும் புறக்கணிக்கவில்லை. மாற்றத்திற்கு ஈடு கொடுக்கவியலாதவர்களே புறக்கணிக்கப்படுகின்றனர். வெறும் வெண்கட்டியையும் பேச்சாற்றலையும் நம்பியே அன்றைய நாளின் கற்றல் கற்பித்தல் நடந்தேறியது. அன்றைய சூழலுக்கு அஃது ஏற்கப்பட்டது. இன்றைய சூழலுக்கு மறுக்கப்படுகிறது.

கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்ட சூழலில் இழப்பு என்பது நம் மாணவர்களுக்கும் நம் தாய்மொழிக்குமே ஆகும். இதை மறுக்க இயலாது. 'கேட்டினும் உண்டு ஓர் உறுதி' என்பது போல், இக் கேட்டால் நமக்கு விளைந்த நன்மைகளும் உள. அவை

1. கணினியின் பயன்பாடு பரவலாக ஆசிரியர்களிடம் பரவிற்று.
2. மாணவர்களும் கணினிகளை இயக்க அறிந்தர்.
3. ஆசிரியர்களுக்கு இணையப் பயன்பாடு உள்ளங்கையில் பிடிப்பட்டன.
4. தமிழில் நிறைய ஆவணங்கள், மென்பொருள்கள் என உருவாயின.
5. ஆசிரியர்கள் நிறைய பயிற்றுப் பொருட்களைக் கணினியில் உருவாக்கினர்.
6. எல்லாப் பள்ளிகளும் மடிக்கணினி, இணையம், நீர்ம படிக உருகாட்டி(LCD) , ஒலிபெருக்கி, அச்சுப்பொறி என பல கருவிகளை இலவயமாகப் பெற்றனர்.

மேற்கண்டவாறு இன்னுஞ் சில நன்மைகள் உள்ளன. மேற்சுட்டிய பயன்களைக் கொண்டும் கருவிகளைக் கொண்டும் எவ்வாறு நம் ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கலாம் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தலாம் என்பதே இக் கட்டுரையின் நோக்கம். சுருங்கச் சொன்னால் ஒரே கல்லில் இரு மாங்காங்காயை அடிப்பது போன்றே. இம் 'மாங்காய்களை' அடிக்க நமக்கு வேண்டுவது கணினி, இணையம், ஆசிரியரின் செயல் திறன்
ஆகியனவே. இனி ஆசிரியர்களின் பணிச்சுமையை இணையம் கொண்டு எவ்வாறு குறைக்கலாம் என்பதைக் காணலாம்.



1. பள்ளியில் நடைபெறுகின்ற கூட்ட அறிக்கைகளைப் பதிவேற்றலாம்.
பயன் 1 : பிற பள்ளி ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம்.

2.கல்வித் திட்டங்கள், பணித்திட்டங்கள், பள்ளி நடவடிக்கைகள் போன்றவற்றைப் பதிவேற்றலாம்.
பயன் 1 : சிறப்பான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மற்ற பள்ளிகளும்
மேற்கொள்ளலாம்; வழிகாட்டியாக அமையும்.

3. பயிற்சித்தாட்கள், பயிற்றுப் பொருட்கள் போன்றவற்றைப் பதிவேற்றலாம்.
பயன் 1 : பிற ஆசிரியர்களுக்குத் துணையாக அமையும்.
பயன் 2 : பயிற்சித்தாள், துணைப்பொருள் போன்றவற்றை அணியம் செய்யும் நேரம் மிச்சப்படும்.
பயன் 3: பலவகையான பயிற்றுப் பொருட்களைக் கொண்டு பல்வகையான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

4. முக்கியச் செய்தி அல்லது அறிவிப்புகளை இடலாம்.
பயன் 1 : தகவல் பறிமாற்றம் வெகு விரைவில் நடைபெறும்.
பயன் 2 : காலம், பொருட்செலவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
பயன் 3 : சொல்லுஞ் செய்தி திரியாமல் அனைவரையும் சென்றடையும்.

5. நம் சொந்த ஆவணங்களை பதிவேற்றலாம்.
பயன் 1 : பாதுகாப்பாக இருக்கும்.
பயன் 2: அழிவி, கணினி கோளாறு ஆகியவற்றிலிருந்து நம் ஆவணங்களைப் பாதுகாக்கலாம்.
பயன் 3 : கணினியும், இணைய தொடர்பும் இருந்தால் எவ்விடத்திலும் நம் ஆவணங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

6. கணக்கெடுப்பு, ஆய்வு போன்றவற்றை இணையத்தில் நடத்தலாம்.
பயன் 1 : தாள், கால வீண், பொருட்செலவு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
பயன் 2:நமக்கு வேண்டிய அனைத்து தரவுகளும் உடனுக்குடனும் சுருக்கமாகவும் பெறலாம்.

7. மாணவர்களுக்கு நேரலை தேர்வு நடத்தலாம்.
பயன் 1 : தாட்களின் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படும்.
பயன் 2 : ஆசிரியரின் தேர்வுத்தாள் திருத்தும் நேரம் மிச்சப்படும்
பயன் 3 : மாணவர்கள் தங்களின் முடிவுகளையும், சரியான விடைகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
பயன் 4 : மாணவர்கள் வீட்டிலிருந்து கூட இத்தேர்வுகளைச் செய்யலாம்.
பயன் 5 : ஆசிரியர் உருவாக்கிய வினாக்கள் பாதுகாக்கப்படுவதோடு, மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் அதை அப்படியே அல்லது சில மாற்றங்கள் செய்தோ பயன்படுத்தலாம்.

8. எண்ணங்கள், கருத்துகள், சிந்தனைகள் போன்றவற்றைப் பதிவிடலாம்.
பயன் 1 : பல ஆசிரியர்களுக்குப் போய் சேரும்; கடுகளாகவது மாற்றம் ஏற்படும்.
பயன 2 : நம் கருத்தின் முதிர்ச்சியை மாற்றுக் கருத்துவரும் பொழுது மதிப்பீடுச் செய்யலாம்.
பயன் 3 : நம் எண்ணம், கருத்து, சிந்தனைகளை வளப்படுத்தலாம்.
பயன் 4 : நம் எழுத்தாற்றல், மொழிவளம் போன்றவற்றை வளர்த்துக்கொள்ளலாம்.

பி.கு. ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் மேற்கண்ட நன்மைகளைப் பெறும் தொழிநுட்ப வழிமுறையை ஒவ்வொன்றாக விரிவாக காணலாம்.

No comments: