எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென வாழும் உயிர்க்கு - குறள்
பொருள் இப்படியிருக்க, அன்றொரு மாலையில் தமிழ் வானொலி மின்னலில் திரு.மூதையா இக்குறளுக்கு திருவள்ளுவரே எண் கணிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லிருக்கிறாம். எண்களே மனிதனை ஆட்டிப்படைக்கின்றதாம், அந்த எண்களை நம் பிடிக்குள் கொண்டுவந்தால் நம் வாழ்க்கையே மாற்றிவிடலாமாம். ( இவர் இங்குக் குறிப்பிடும் எண் கணிதம் என்பது பெயரை மாற்றி எண்ணைக் கூட்டி இறுதியில் இருந்த பெயரும் பாழாய்ப் போகுமே அந்த எண் கணிதம்).
தம்முடைய வணிகத்திற்காக திருக்குறளை ஒரு கருவியாய்ப் பயன்படுத்தி திருக்குறளுக்கே மாசு ஏற்படுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு 'மின்னலும்' இடங்கொடுத்திருப்பது வருந்ததக்கத்தது. திருக்குறள் எவ்விடத்திலும் அறிவிற்குப் புறபான கருத்துக்களைப் பகர்வதில்லை என்பது அறிஞர்களின் தேற்றம். ஆனால், அறிவிற்கு ஏற்கா வண்ணம் பொருள் எழுதியவர்கள் அவர்தம் சார்ந்த அல்லது பற்றியிருந்த சமயம், தொடர்பு, வாழ்க்கை நுகர்வு, அவர்தம் குன்றிய ஆராய்ச்சி போன்றவைகளால் குறளுக்குப் பொருளைத் திரித்திருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் 'அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு'. 'எண்' என்ற சொல் அக் குறளில் வருவதால் அவரின் எண் கணிததிற்குச் சாதகமாக்கிக் கொண்டது திரு மூதையாவின் திறமையோ? சரி திறமையென்றாலும் அதே குறளில் வரும் 'எழுத்து'க்கு அவரால் விளக்கம் சொல்ல முடியுமா? எழுத்தும் நம் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கின்றதோ? அப்படியானால் அந்த எழுத்து என்ன எழுத்து? ஆங்கில A,B,C எழுத்தா? அல்லது தமிழ் அ,ஆ,இ எழுத்தா? சீன எழுத்தா? சமற்கிருத எழுத்தா?? திருவள்ளுவர் காலத்தில் ஆங்கிலமே தோன்றவில்லை. சீன நாட்டுத் தொடர்பும் வள்ளுவர்க்கு உண்டா என்றால் அதுவும் இருக்க வாய்ப்பில்லை. அக்காலகட்டத்தில் ஆரிய தொடர்பால் சமற்கிருதமே இருந்திருக்கிறது. நிலை இப்படியிருக்க, எண் கணிதத்தில் தமிழ்ப்பெயர்களுக்குப் போய் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எண் கூட்டி பின் அதற்குப் பலன் சொல்லுதல் எவ்வளவு மடமை.
தமிழில் ர,ற, ல,ள,ழ, ந,ன,ண என எழுத்துக்களை அறிவோம். இவ்வெழுத்துக்களை ஆங்கிலத்தில் ra, ra, la, la, la, na, na, na எனத்தான் எழுத முடியும் ஒலிக்கவும் முடியும். கல், கள் என்பதற்கு வேறுபாடு உண்டு. அப்படியிருக்க ஒருவரின் பெயரைக் கூட்டு எண் வர வேண்டும் என்பதற்காக எப்படியோ எழுத்தைக் கூட்டியோ, குறைத்தோ எழுதிக்கொள்கிறார்கள். ஆனால் அப்பெயரை அழைக்கும் போது இயல்பாகவே அழைக்கின்றனர். காட்டாக; முனியாண்டி எனும் பெயரை எண் கனிதப்படி muniyandi, muniyandy, muniyaandii, muniyaandy, muniiyandi இவற்றில் ஏதோ ஒரு எழுத்துக்கூட்டலை எடுத்துக்கொள்வோம். இனி முனியண்டி, முனீயாண்டீ, முனியண்டீ என்றா அழைக்கப்போகிறோம்? எப்படி மாற்றி எழுதினாலும் முனியாண்டி என்றுதானே அழைக்க வேண்டும்?
தமிழ்ப்பெயர்கள் ஆங்கில உச்சரிப்பிற்கும் எழுத்திற்கும் ஒருபோதும் ஒற்றிவராது. அதுபோல ஆங்கிலப் பெயர்களும் பிற மொழி பெயர்களும் தமிழ்மொழிக்கு. உண்மை இப்படியிருக்க பிறப்புச் சான்றிதழில் மாற்றி எழுதுவதாலோ, அடையாள அட்டையில் பெயரை மாற்றி எழுதுவதாலோ, பொருளக கணக்குப் புத்தகத்தில் பெயரை மாற்றி எழுதுவதலோ அல்லது வேறு ஆவணங்களில் மாற்றி எழுதுவதாலோ வாழ்க்கையே தலைக்கீழாக மாறும், புகழ் வரும், இன்பம் வரும், நோய் நீங்கும் என்பதெல்லாம் பித்தலாட்டாம் என்பதைத் தவிற என்ன எனலாம்??
சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி என்போரின் பட்டியலை மீண்டும் மீண்டும் சொல்லி எண் கணிதத்திற்கு வலிமை சேர்க்கும் அறியாமை மற்றொன்று. அப்படியானால் தந்தை பெரியார், பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர் எனப் பட்டியல் நீளும். இவர்களின் இயற்பெயரை எந்த எண் கணித சோதிடரிடம் சென்று பெயரை மாற்றிய பிறகு உலகப் புகழ் அடைந்தனர்? திரு. மூதையா சொல்வாரா?
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றவை யெல்லாம் பிற - 661
ஒரு செயலின் வெற்றி என்பது அச் செய்யலாற்றுவரின் மன உறுதியை மட்டுமே பொருத்தது என்கிறார் வள்ளுவர்.
தன்நலத்திற்காகத் திருக்குறளின் மெய்பொருளை மறைத்துப், பொருள் திரட்டும் மூடர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவிப்போம்!
No comments:
Post a Comment